Home Tamil பால் பணியாரம்

பால் பணியாரம்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
பால் பணியாரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் ஒரு பால் பணியாரத்தின் சுவை நாவில் பட்டு விட்டால் போதும் அதை மீண்டும் மீண்டும் சுவைத்து கொண்டே இருக்க தோன்றும்.

பால் பணியாரம் தமிழகத்தில் பலருக்கும் விருப்பமான ஒரு இனிப்பு பலகாரம். செட்டிநாடு சமையல் முறையை சார்ந்த இவை பண்டிகை நாட்களில் தமிழகத்தில் இருக்கும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வாழும் பலரது இல்லங்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அவர்களின் இல்லத் திருமண விருந்துகளிலும் பால் பணியாரத்தை நாம் பரவலாக காண முடியும். பால் பணியாரத்தை சாதாரண நாட்களிலும் அவர்கள் மாலை நேர சிற்றுண்டியாக செய்து சுவைப்பார்கள்.

Paal Paniyaram

image via southindianfoods.in

பல தலைமுறைகளை கடந்தும் கூட பால் பணியாரம் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக இருந்தாலும் பெரியோர்களிடம் பால் பணியாரத்திற்கு இருக்கும் வரவேற்பே தனிதான். வாயில் வைத்ததும் இதனின் சட்டென கரையும் தன்மையே அதற்கு காரணம். பால் பணியாரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் ஒரு பால் பணியாரத்தின் சுவை நாவில் பட்டு விட்டால் போதும் அதை மீண்டும் மீண்டும் சுவைத்து கொண்டே இருக்க தோன்றும். இவ்வளவு ஏன் வீட்டில் இருப்பவர்கள் மத்தியில் தள்ளு முள்ளு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போங்கள்.

பால் பணியாரம் செய்வதற்கு மிக எளிமையான செய்முறை தான் எனினும் இதை செய்வதற்கு சிறிது நேரம் பிடிக்கும். ஆனால் இதை செய்து நாம் சுவைக்கும் போது நாம் செலவிட்ட நேரம் மிகவும் பயன் ஆனது தான் என்று தோன்றும். ஏனென்றால் இதனின் சுவை அப்படி. மேலும் இதில் நாம் தேங்காய்ப்பால் மற்றும் ஏலக்காய் சேர்த்து செய்வதால் மற்ற இனிப்பு வகைகளை விட இவை உடம்பிற்கு நல்லது. அதனால் நம் குழந்தைகளுக்கும் பால் பணியாரத்தை எவ்வித அச்சமும் இன்றி நாம் செய்து கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே பால் பணியாரம் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Paal Paniyaram
5 from 1 vote

பால் பணியாரம்

பால் பணியாரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் ஒரு பால் பணியாரத்தின் சுவை நாவில் பட்டு விட்டால் போதும் அதை மீண்டும் மீண்டும் சுவைத்து கொண்டே இருக்க தோன்றும்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Dessert
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1 கப் பச்சரிசி
  • 1 1/2 கப் சர்க்கரை
  • 1 தேங்காய்
  • 4 to 6 ஏலக்காய்
  • 1 சிட்டிகை உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  • அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்ட அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு நைசாக அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்.
  • பின்பு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் இருக்கும் மாவை நன்கு அலசி பாத்திரத்தில் இருக்கும் மாவில் ஊற்றி அதை தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். (தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
  • இப்பொழுது தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் நாம் அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து அந்த தேங்காய் பாலில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையோ அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கரையும் வரை ஒரு கரண்டி மூலம் கலக்கி விட்டு சர்க்கரை கரைந்ததும் அதை மீண்டும் ஒரு முறை வடிகட்டி வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பணியாரத்தை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை நம் கைகளின் மூலம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கடாயின் அளவிற்கேற்ப போடவும்.
  • பின்னர் பணியாரம் ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது வெந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை ஜல்லி கரண்டியின் மூலம் நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள மாவையும் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். (பணியாரம் ஒன்றோடு ஒன்று ஓட்டி கொண்டிருந்தால் அதை இப்பொழுதே பிரித்து வைத்து கொள்ளவும்.)
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த பணியாரத்தை போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பணியாரத்தை போட்டு தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பணியாரத்தை எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை நன்கு வடிய விடவும். (இவ்வாறு செய்வதால் பணியாரம் எளிதாக தேங்காய் பாலில் ஊறி விடும்.)
  • தண்ணீர் வடிந்தவுடன் பணியாரத்தை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விட்ட பின்பு அதை பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் இனிப்பான பால் பணியாரம் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

 

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter