பன்னீர் மஞ்சூரியன்

Tamil

பன்னீர் மஞ்சூரியன் ஏசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு Indo-Chinese உணவு. பன்னீர் மஞ்சூரியனுக்கு என உணவு பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உண்டு. இவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய் முறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் இதை சைவ பிரியர்கள் விரும்பி உண்பதால் இதில் முட்டை சேர்ப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் சைனாவில் பன்னீர் மஞ்சூரியனில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து தான் செய்வார்கள்.

பன்னீர் மஞ்சூரியன் பொதுவாக பிரைட் ரைஸ் அல்லது நூடுல்சுக்கு சைட் டிஷ் ஆக தான் உண்ணப்படுகிறது. ஆனால் பன்னீரில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து நிரம்பி இருப்பதால் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம். இதை சிறிது கிரேவியாக செய்தால் சப்பாத்தி மற்றும் நான்க்கு சைட் டிஷ் ஆகவும் இதை உண்ணலாம்.

paneer manchurian - பன்னீர் மஞ்சூரியன்

இப்பொழுது கீழே பன்னீர் மஞ்சூரியன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

paneer manchurian 380x380 - பன்னீர் மஞ்சூரியன்
0 from 0 votes

பன்னீர் மஞ்சூரியன் ரெசிபி

பன்னீர் மஞ்சூரியன் பொதுவாக பிரைட் ரைஸ் அல்லது நூடுல்சுக்கு சைட் டிஷ் ஆக தான் உண்ணப்படுகிறது.
Prep Time15 mins
Cook Time15 mins
Total Time30 mins
Course: Side Dish, Snack
Cuisine: Indian, North Indian

பன்னீர் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்

 • 1 கப் மைதா மாவு
 • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
 • 200 கிராம் பன்னீர்
 • 1 பெரிய வெங்காயம்
 • 2 பச்சை குடைமிளகாய்
 • 1 பச்சை மிளகாய்
 • 1 எலுமிச்சம் பழம்
 • 4 பல் பூண்டு
 • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
 • 1 மேஜைக்கரண்டி வினிகர்
 • 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
 • தேவையான அளவு மிளகுத் தூள்
 • தேவையான அளவு மிளகாய் தூள்
 • 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
 • 1 கை அளவு வெங்காய தாள்
 • தேவையான அளவு எண்ணெய்
 • தேவையான அளவு உப்பு

பன்னீர் மஞ்சூரியன் செய்முறை

 • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு, வெங்காய தாள், மற்றும் பன்னீரை நன்கு கழுவி அதை நறுக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி அதன் சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு Bowl லை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
 • அடுத்து அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கட்டி தட்டாமல் கரைத்து அதை பஜ்ஜி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
 • பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை இந்த மாவில் சேர்த்து அதை பக்குவமாக நன்கு மாவுடன் பன்னீர் சேருமாறு பிரட்டி அதை சுமார் 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற விடவும்.
 • பன்னீர் ஊருவதற்குள் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் pan ன் அளவிற்கேற்ப பன்னீர் துண்டுகளை மாவில் இருந்து எடுத்து போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் வந்ததும் எடுத்து ஒரு தட்டில் டிஸ்யூ பேப்பரை விரித்து அதில் வைத்து எண்ணெய்யை வடிய விடவும்.
 • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு சீரகத்தை போட்டு வறுக்கவும்.
 • சீரகம் வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
 • பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
 • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் சோயா சாஸ், வினிகர், தக்காளி சாஸ், மற்றும் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாரை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
 • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை பக்குவமாக நன்கு மசாலாவுடன் சேருமாறு சுமார் 2 நிமிடம் வரை கிளறி விடவும்.
 • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகுதூள் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (இது கிரேவியாக வேண்டுமென்றால் 2 மேஜைக்கரண்டி சோள மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்துக் கொள்ளவும்.)
 • பின்பு இறக்குவதற்கு முன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாளை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.