மட்டன் குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. மட்டன் குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மட்டன் குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
மட்டன் குழம்பின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை செய்வதற்கு சிறிது அதிக நேரம் எடுத்தாலும் இதை நாம் சரியான பக்குவத்தில் செய்து விட்டால் இவை சுவைப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும். மட்டன் குழம்பு செய்யும் போது வரும் வாசம் வீட்டில் இருக்கும் நபர்களை தானாக கிச்சனுக்கு அழைத்து வந்து விடும்.
இப்பொழுது கீழே மட்டன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
5 from 1 vote
மட்டன் குழம்பு ரெசிபி
மட்டன்குழம்பின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை சுவைப்பதற்கு மிகவும் அட்டகாசமாகஇருக்கும்.
Prep Time20mins
Cook Time30mins
Total Time50mins
Course: Side Dish
Cuisine: South Indian, Tamil, Tamil Nadu
மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
1கிலோ மட்டன்
30சின்ன வெங்காயம்
1பெரிய வெங்காயம்
4தக்காளி
2பச்சை மிளகாய்
10காஞ்ச மிளகாய்
8பல் பூண்டு
2துண்டு இஞ்சி
2மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
½மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1மேஜைக்கரண்டி தனியா
2மேஜைக்கரண்டி சீரகம்
1மேஜைக்கரண்டி மிளகு
1மேஜைக்கரண்டி சோம்பு
1துண்டு பட்டை
4கிராம்பு
2ஏலக்காய்
1நட்சத்திர பூ
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கருவேப்பிலை
மட்டன் குழம்பு செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி, மற்றும் மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் தனியா, சீரகம், மிளகு, சோம்பு, மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில்10 லிருந்து 12 சின்ன வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சியை சேர்த்து பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நாம் வதக்கிய மசாலா பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் அதை ஆற விடவும்.
அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி அதை முதலில் சிறிது அரைத்து விட்டு பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் நட்சத்திர பூவை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயம், ஒரு பெரிய வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் பொன் நிறம் ஆகும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் கருவேப்பிலையை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வதக்கவும்.
6 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு தக்காளி நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.
தக்காளி நன்கு வெந்ததும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டனை போட்டு அதை பக்குவமாக நன்கு மசாலாக்கலோடு ஓட்டுமாறு கிண்டி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதில் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும்.)
குழம்பு நன்கு கொதித்ததும் ஒரு மூடி போட்டு அதை சுமார் ஒரு மணி நேரம் வரை வேக விடவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பின்பு அதில் சிறிதளவு கருவேப்பிலை தூவி மீண்டும் ஒரு கிளறு கிளறி அதை அடுப்பிலிருந்து இறக்கி சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் மட்டன் குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.