பொதுவாக பலரும் முட்டையை பொடிமாசாகவோ, அவிச்ச முட்டையாகவோ, ஆஃப் பாயிலாகவோ, கலக்கியாகவோ, அல்லது ஆம்லெட் ஆக செய்து உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு முட்டையுடன் நாம் உருளைக்கிழங்கை சேர்த்து உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ஆகவும் நாம் முட்டையை சுவைக்கலாம். இதை உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு செய்முறையை பின்பற்றி மற்றும் அவரவருக்கு விருப்பமான மசாலாக்களை சேர்த்து செய்கிறார்கள்.
முட்டை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து செய்யப்படும் ஆம்லெட்டை ஆங்கிலத்தில் Potato omelet என்றும் மற்றும் ஸ்பானிய மொழியில் tortilla de patatas அல்லது Spanish tortilla என்று அழைக்கிறார்கள். இவை ஸ்பானிய பாரம்பரிய உணவு முறையை சார்ந்தவை என்றும், இவை பதினெட்டாம் நூற்றாண்டின் போதே ஸ்பெயினில் உதயமானது என்றும் கூறப்படுகிறது.
முட்டையை நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் முறை அலுத்து போனால் இவ்வாறு உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ஆக செய்து கொடுத்தால் இதை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்
தேவையான பொருட்கள்
- 2 முட்டை
- 1 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்
- 1/4 மேஜைக்கரண்டி மிளகு தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு வேகும் வரை அதை நன்கு வதக்கவும்.
- உருளைக்கிழங்கு வெந்ததும் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மசாலாகளின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- மசாலாகளின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை அதன் மேலே தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் போட்டு வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதை நன்கு அடித்த பின்பு நாம் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை அதில் போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
- அடுத்த ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி pan ஐ சிறிது சுட வைக்கவும். (Pan ஐ அதிகமாக சுட வைத்து விடக் கூடாது அப்படி செய்தால் முட்டை pan னோடு ஒட்டி கொள்ளும் எடுப்பதற்கு சிரமமாக ஆகிவிடும்.)
- Pan சிறிது சுட்டதும் அதில் நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டையை நன்கு பரவலாக ஊற்றி மூடி போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கரண்டியின் மூலம் திருப்பி போட்டு அதை மீண்டும் சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- கரண்டியின் மூலம் திருப்பி போடுவதற்கு சிரமமாக இருந்தால் ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதை pan ன் மேலே மூடி வைத்து பக்குவமாக pan ஐ திருப்பி ஆம்லெட்டை தட்டுக்கு மாற்றி பின்பு தட்டிலிருந்து பக்குவமாக மீண்டும் ஆம்லெட்டை pan க்கு சரித்து விடவும்.
- உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் சுமார் 2 நிமிடம் வெந்த பின் அதை எடுத்து சுட சுட பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.