பாலக்கீரை புலாவ்

By Praveen Kumar
பாலக்கீரை புலாவ் ஒரு வித்தியாசமான, சத்தான, மற்றும் மிகவும் சுவையான ஒரு உணவு ஆகும். இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

உலகம் முழுவதும் உணவுப் பிரியர்கள் மட்டும் இன்றி பலராலும் விரும்பி உண்ண படக்கூடிய ஒரு உணவு தான் புலாவ். பலவிதமான புலாவ்கள் இருக்கின்றன. அதில் நாம் இன்று எங்கு காண இருப்பது அற்புதமான மற்றும் மிகவும் சத்தான பாலக்கீரை புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பாலக்கீரை புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Palak Keerai Pulao
Palak Keerai Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

சமீபகாலமாக நமது பயணம் ஆரோக்கியத்தை நோக்கி இருப்பதினால் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு வித்தியாசமானதாக மட்டும் இன்றி சத்தானதாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறோம். அவ்வாறு இருக்கையில் பாலக்கீரை கொண்டு செய்யப்படும் இந்த பாலக்கீரை புலாவ் நம்முடைய இரண்டு நிபந்தனைகளையும் நிச்சயம் பூர்த்தி செய்யும். அதுமட்டுமின்றி பாலக்கீரையை பொரியலாகவோ அல்லது கீரை குழம்பாகவோ செய்து நம் பிள்ளைகளை சாப்பிட வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவ்வாறு இருக்கையில் அவர்களை எளிதில் தானாகவே பாலக்கீரையை சாப்பிட வைப்பதற்கான விடை இந்த பாலக்கீரை புலாவ் தான். அதனால் இதை கட்டாயம் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் சுட்டீஸ்களின் ரியாக்ஷன் எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

பாலக்கீரை புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, பாலக்கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவை நாம் சேர்க்கும் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், சீரகம், மிளகு, கரம் மசாலா, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, மற்றும் நட்சத்திர சோம்பு போன்ற மசாலா பொருட்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து மிக அட்டகாசமாக இருக்கும். மற்ற புலாவ்களை போலவே இந்த பாலக்கீரை புலாவையும் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

இவ் உணவின் வரலாறு:

புலாவின் வரலாறு எட்டாம் நூற்றாண்டை சார்ந்தது. எட்டாம் நூற்றாண்டில் Abbasid சாம்ராஜ்யத்தில் தான் முதன்முதலாக புலாவ் செய்யப்பட்டு இருப்பதாக வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். முகலாய படையெடுப்பின்போது அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை சார்ந்த சமையல் முறைக்குள் புலாவ் நுழைந்ததாக கூறுகின்றனர். காலப்போக்கில் அந்தந்த பகுதிகளை சார்ந்த சமையல் முறைக்கு ஏற்ப மக்கள் இதை செய்து சுவைக்க தொடங்கி இருக்கின்றனர். அதுவே இன்றைக்கு பலவிதமான புலாவ்கள் உதயமாகி இருப்பதற்கான காரணம்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

பாலக்கீரை புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

பாலக்கீரை புலாவை முழுமையாக சுமார் 40 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

பாலக்கீரை புலாவை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் அதை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்து சுவைக்கலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

பாலக்கீரை புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் பாலக்கீரையில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்த அழுத்தத்தை குறைக்க, மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் உபயோகிக்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பாலில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.

 

Palak Keerai Pulao
No ratings yet

பாலக்கீரை புலாவ்

பாலக்கீரை புலாவ் ஒரு வித்தியாசமான, சத்தான, மற்றும் மிகவும் சுவையான ஒரு உணவு ஆகும். இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time15 minutes
Cook Time45 minutes
Total Time1 hour
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 1 கட்டு பாலக்கீரை
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 tsp மல்லி தூள்
  • 1 tsp சீரக தூள்
  • 1/2 tsp சீரகம்
  • 1/2 tsp மிளகு
  • 1 tsp கரம் மசாலா
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 இலவங்கப்பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 1/2 cup தேங்காய் பால்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து பாலக்கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை நறுக்கி, மற்றும் தேங்காய் பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு கொரகொரப்பான பதத்திற்க்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் சீரகம், மிளகு, நட்சத்திர சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக்கீரையை சேர்த்து அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து இதில் சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
  • இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே சுமார் 15 நிமிடம் வரை வைக்கவும்.
  • 15 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து பாலக்கீரை புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

பாலக்கீரை புலாவை செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை நாம் பயன்படுத்தலாமா?

உங்களுக்கு சீரக சம்பா அரிசி பிடிக்கும் என்றால் நீங்கள் தாராளமாக சீரக சம்பா அரிசியையே பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் நாம் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியை கொண்டே நாம் இந்த பாலக்கீரை புலாவை செய்யலாம்.

பாலக்கீரை புலாவ் செய்ய நாம் கட்டாயம் தேங்காய் பாலை பயன்படுத்த வேண்டுமா?

கட்டாயம் ஏதும் கிடையாது. நாம் தேங்காய் பாலை கொண்டு செய்தால் புலாவ் நன்கு ரிச்சாக இருக்கும். நீங்கள் குறுகிய நேரத்தில் செய்கிறீர்கள் என்றால் தேங்காய் பாலை தவிர்த்து விட்டு தண்ணீரைக் கொண்டே தாராளமாக செய்யலாம்.

பாலக்கீரை புலாவிற்க்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?

பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா,  பன்னீர் டிக்கா, மஷ்ரூம் மஞ்சூரியன், வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை, போன்ற சைடிஷ்கள் மிகப் பொருத்தமாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சிக்கன் லாலிபாப், சிக்கன் மஞ்சூரியன், சில்லி சிக்கன் போன்ற சைடிஷ்கள் அட்டகாசமாக இருக்கும்.

பாலக்கீரை புலாவில் நாம் ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

பாலக்கீரை புலாவ் இப்படி உண்பதற்க்கே நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கட்டாயம் காய்கறிகள் வேண்டும் என்றால் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாலக்கீரை சாதத்தை இன்னும் ஸ்பைசியாக மாற்றுவது எப்படி?

நீங்கள் அதிக காரத்தை விரும்புவோர் என்றால் நீங்கள் உங்கள் காரத்திற்க்கு ஏற்ப கூடுதலாக அரை மேஜைகரண்டியில் இருந்து ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை என்றால் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment