மசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால் வடையை பொதுவாக மக்கள் தனியாகத்தான் சுவைப்பார்கள் ஆனால் அதை சிலர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் உண்பார்கள்.
மசால் வடை பார்ப்பதற்கு ஆமை வடிவில் இருப்பதால் இதை ஆமை வடை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். இதற்கு பருப்பு வடை என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மசால் வடை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி ஆக இருக்கிறது. தமிழகத்தில் மசால் வடை என்று அழைக்கப்படும் இவை, கேரளாவில் parippu vada அல்லது மசால் வடை என்றும், கர்நாடகாவில் masala vade என்றும் அழைக்கப்படுகிறது.
மாலை நேரத்தில் மசால் வடையை சூடான டீயுடன் உண்பது ஒரு தனி சுவை தான். மசால் வடையை விரும்பி உண்பவர்கள் அதை பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி உண்கிறார்கள். ஆனால் இதை நாம் வீட்டிலேயே மிக எளிதாக எந்த ஒரு கடினமான செய்முறையும் இன்றி கடைகளில் கிடைப்பதை விட இதை நாம் சுகாதாரமான முறையில் செய்து விடலாம். கடலை பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும் இதை செய்வதற்கு அதிக நேரமும் பிடிக்காது.
இப்பொழுது கீழே மசால் வடை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
மசால் வடை
தேவையான பொருட்கள்
- 1 கப் கடலை பருப்பு
- 3 பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 2 காய்ந்த மிளகாய்
- 4 பூண்டு பல்
- 1 இஞ்சி துண்டு
- 1 பட்டை துண்டு
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு புதினா
செய்முறை
- முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, மற்றும் பூண்டை தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.
- பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து மீதமுள்ள கடலை பருப்புகளை போட்டு அதை அரைத்து கொள்ளவும்.
- இந்த பருப்பை கொரகொரப்பான பதத்திற்கு அரைத்தால் போதும் அதை நன்கு நைசாக அரைத்து விடக்கூடாது.
- இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் இந்த அரைத்த கலவையை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டு, எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
- இந்த கலவையை நன்கு கிளறி விட்ட பின் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
- இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சட்ட பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை வடசட்டியின் அளவிற்கேற்ப பக்குவமாக எடுத்து எண்ணெய்யில் போடவும்.
- பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
- வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
- இவ்வாறு மீதமுள்ள வடைகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மசால் வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.