முட்டை மேகி

Tamil

மேகிக்கு எந்த விதமான அறிமுகமும் தேவை இல்லை ஏனென்றால் இவை அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக குழந்தைகள் மத்தியில் மேகிக்கு இருக்கும் மவுசே தனி தான். மேகி என்ற பெயரை கேட்டாலே போதும் குழந்தைகள் ஆர்வமாகிவிடுவார்கள். மேலும் இவை இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடியவை என்பதால் இல்லத்தரசிகள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு. மேகி உலகம் முழுவதும் எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமோ அதற்கு நிகரான அளவு அதன் மேல் சர்ச்சைகளும் உண்டு.

மேகி 1884 ஆம் ஆண்டு Julius Maggi ஆல் சுவிட்சர்லாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. அதனாலேயே தான் இதற்கு மேகி என பெயர் சூட்டப்பட்டது. 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவை 1947 ஆம் ஆண்டு உலகின் உணவு உற்பத்தி துறையில் ஜாம்பவானாக திகழும் Nestle நிறுவனத்தினால் வாங்கப்பட்ட பின்பு இவை உலகம் முழுவதும் பிரபலமடையத் துவங்கியது.

egg maggi - முட்டை மேகி

பொதுவாக மேகியில் உடம்புக்கு தேவையான எந்த ஒரு சத்தும் இல்லை என்ற ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் இதில் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான புரத சத்தை தரும் முட்டைகளை சேர்ப்பதனால் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எனினும் மேகியில் உடம்புக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை என்பதால் இதை நம் உணவு முறையில் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை செய்து சுவைப்பதோடு நிறுத்தி கொண்டால் நல்லது.

இப்பொழுது கீழே முட்டை மேகி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

egg maggi 380x380 - முட்டை மேகி
0 from 0 votes

முட்டை மேகி ரெசிபி

மேகி என்ற பெயரை கேட்டாலேபோதும் குழந்தைகள் ஆர்வமாகிவிடுவார்கள்.
Prep Time10 mins
Cook Time10 mins
Total Time20 mins
Course: Snack
Cuisine: Indian, South Indian

முட்டை மேகி செய்ய தேவையான பொருட்கள்

 • 3 முட்டை
 • 2 மேகி பாக்கெட்
 • 1 பெரிய வெங்காயம்
 • 1 1/2 தக்காளி
 • 1 பச்சை மிளகாய்
 • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/2 மேஜைக்கரண்டி சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா
 • தேவையான அளவு மிளகாய் தூள்
 • தேவையான அளவு எண்ணெய்
 • தேவையான அளவு உப்பு
 • சிறிதளவு கொத்தமல்லி

முட்டை மேகி செய்முறை

 • முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நன்கு பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
 • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சுமார் 5 நிமிடம் வரை கிண்டி பொடிமாசாக ஆக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
 • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.
 • தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
 • மசாலாக்களின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டை பொடிமாசை போட்டு அதனுடன் மேகி பாக்கெட்டில் வரும் மசாலாவையும் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
 • அடுத்து அதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு தண்ணீரை கொதிக்க விடவும்.
 • தண்ணீர் கொதிப்பதற்குள் 2 பீஸ் மேகியை எடுத்து அதை பாதியாக உடைத்து தண்ணீரில் போடுவதற்கு தயாராக வைத்து கொள்ளவும். (மேகி குழந்தைகள் உறிஞ்சி சாப்பிடுவதற்கு என்றால் அதை உடைக்காமல் அப்படியே தண்ணீரில் போடவும்.)
 • தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் மேகி துண்டுகளை சேர்த்து அதை பக்குவமாக கரண்டியின் மூலம் பிரித்து விட்டு மசாலாவுடன் நன்கு சேருமாறு அதை கிண்டி விடவும்.
 • பின்பு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு கடாயில் ஒரு மூடி போட்டு சுமார் 5 இருந்து 7 நிமிடம் வரை அதை வேக விடவும்.
 • 5 நிமிடத்திற்குப் பிறகு மூடியைத் திறந்து அதில் தண்ணீர் இருந்தால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை மேகியை நன்கு கிளறி விடவும்.
 • அடுத்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை மேகி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.