பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இது செரிமானத்திற்கு உகந்ததாக இருப்பதால் விருந்துகளில் நிறைவு உணவாக பரிமாறப்படுகிறது. பாயாசம் வெவ்வேறு பொருட்களை கொண்டு வெவ்வேறு விதமாக செய்யப்படுகிறது. பாயாசங்களில் பல ரகம் உண்டு. அதில் பால் பாயாசம், பருப்பு பாயாசம், மற்றும் அவல் பாயாசம் முக்கியமானவை. இதில் பாலில் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யப்படும் சேமியா பால் பாயாசம் தென்னிந்தியாவில் பிரபலமானது.
பாயாசங்களின் பிறப்பிடம் தமிழகம் என்று சில வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அதற்கு ஏற்றவாறே பாயாசம் தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி உள்ளது. பாயாசம் இல்லாத பண்டிகையோ விருந்தோ கிடையவே கிடையாது. இப்பொழுது இந்த இனிப்பான சேமியா பாயாசத்தை செய்வதற்கு கீழே தேவையான பொருட்களையும் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சேமியா பாயாசம்
Ingredients
- 1 கப் சேமியா
- 1/4 கப் ஜவ்வரிசி
- 3/4 கப் சர்க்கரை
- 3 கப் காய்ச்சிய பால்
- 3 மேஜைக்கரண்டி நெய்
- 4 ஏலக்காய்
- 2 மேஜைக்கரண்டி முந்திரி
- 2 மேஜைக்கரண்டி பாதாம்
- 2 மேஜைக்கரண்டி உலர் திராட்சை
Instructions
- ஒரு பேனை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அதில் 3 மேசைக்கரண்டி நெய்யை ஊற்றவும். நெய் காய்ந்ததும் அதில் முந்திரியைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.
- முந்திரி சிவந்ததும் அதில் பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து வதக்கவும். உலர் திராட்சை ஊதும் வரை இதை வதக்கவும்.
- பின்னர் இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதே பாத்திரத்தில் சேமியாவை போட்டு சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.
- சேமியா பொன்னிறம் வந்ததும் அதை இறக்கி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒன்றரை கப் பால் சேர்த்து அதில் ஜவ்வரிசியை போட்டு ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வரும் அளவிற்கு வேக வைக்கவும்.
- ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வந்ததும் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.
- பின்னர் அதை நன்கு வேக வைக்கவும்.
- சேமியா நன்கு வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் ஒன்றரைக் கப் பாலை சேர்த்து கலக்கவும். பின்னர் அதை கொதிக்க விடவும்.
- பாயாசம் நன்கு கொதித்ததும் அதில் ஏலக்காய் எடுத்து பொடித்து போடவும். கடைசியாக நெய்யில் வறுத்து வைத்திருக்கும் பாதாம் முந்திரியை அதில் போட்டு ஒரு கிளறு கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். (ஆறிய பின்பு பாயாசம் கெட்டியாக இருந்தால், சிறிது அளவு பாலை கொதிக்க வைத்து அதில் ஊற்றவும்.)
- இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் இனிப்பான சேமியா பாயாசம் தயார்.
- இதை ஒரு bowl ல் ஊற்றி சிறிது முந்திரி மற்றும் பாதாமை அதன் மேலே தூவி பரிமாறவும்.
Sign up for our newsletter
Add Awesome Cuisine as a Preferred Source
You can find the recipe for Semiya Payasam in English in this page