Diamond biscuits என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கலகலா தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான உணவு வகை. இவை சுஜி, காலாகாலா மற்றும் வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இவை மைதா மாவு, ரவை, மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படுகிறது.
இனிப்பு வகையை சேர்ந்த இந்த கலகலா பெரும்பாலும் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் திருநாள்களின் போது பெரும்பாலானோர் இல்லங்களில் செய்து உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டாருடன் பகிர்ந்து சுவைத்து மகிழ்ந்திடும் ஒரு உணவு வகை. இவை வெவ்வேறு வடிவங்களில் செய்யக் கூடியவை என்பதால் குழந்தைகளிடமும் அதீத வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பொழுது கீழே கலகலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தைக் காண்போம்.
கலகலா
Ingredients
- 1 கப் மைதா மாவு
- 1/4 கப் கால் கப் ரவை
- 1/2 கப் அரை கப் சர்க்கரை
- 1 1/2 மேசைக்கரண்டி நெய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
Instructions
- முதலில் மைதா மாவு, ரவை, மற்றும் தேவையான அளவு உப்பை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்பு அதில் நெய்யைக் சிறிது காய்ச்சி ஊற்றி நன்கு மாவும் நெய்யும் ஒரு சேர கலந்து கொள்ளவும்.
- பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
- பின்னர் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிப்பி வடிவம் போல கையில் வைத்து கட்டை விரலால் தேய்த்தோ அல்லது ஒரு புது சீப்பின் மேலே வைத்து கட்டை விரலால் தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். (உங்களுக்குப் பிடித்தமான வடிவிலும் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.)
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் பிடித்து வைத்திருக்கும் மாவை கடாயின் அளவிற்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறையாக போட்டு பொன்னிறம் வருமளவிற்கு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை கப் சர்க்கரையை போட்டு சர்க்கரை கரையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு சூட வைக்கவும்.
- இது நன்கு பாகு நிலையை எட்டியதும் அடுப்பிலிருந்து இறக்கி பொரித்து வைத்திருக்கும் கலகலா துண்டுகள் மீது ஊற்றவும்.
- பின்பு அனைத்து துண்டுகள் மீதும் படும் அளவிற்கு நன்கு கிளறி 5 லிருந்து 10 நிமிடம் வரை அதை அப்படியே ஊற வைக்கவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து பார்த்தால் உங்கள் சூடான, சுவையான மற்றும் இனிப்பான கலகலா ஸ்வீட் தயார்.
- தேவைக்கேற்ப எடுத்து கொண்டு மீதமுள்ளதை ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைக்கவும்.
- இந்த இனிப்பு வகையை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.