Home Tamil சிக்கன் லாலிபாப் மசாலா

சிக்கன் லாலிபாப் மசாலா

0 comment
Published under: Tamil
குழந்தைகளுக்கு இந்த சிக்கன் லாலிபாப் மசாலாமிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும்.

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிக்கன் சார்ந்த உணவுகளில் சிக்கன் லாலிபாப் மசாலா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் சார்ந்த உணவுகளை விரும்பி உண்ணும் உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது. சிக்கன் லாலிபாப் மசாலாவை பொதுவாக மக்கள் பிரியாணி, ஃப்ரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ்க்கு சைடிஷ் ஆக சுவைக்கிறார்கள். இதை நாம் வெறுமனேவும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம்.

சிக்கன் லாலிபாப் மசாலா / Chicken Lollipop Masala

சிக்கன் லாலிபாப் மசாலாவை விரும்பி உண்பவர்கள் இதை பெரும்பாலும் துரித உணவகங்களிலோ அல்லது ரெஸ்டாரன்ட்களிலோ ஆர்டர் செய்து தான் இதை சுவைக்கிறார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நாம் வெகு சுலபமாக வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து விடலாம் என்று. பெரும்பாலான குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அதனால் இதை நாம் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே செய்வதனால் நம் குழந்தைகளுக்கும் இதை எந்த ஒரு அச்சமுமின்றி நாம் கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே சிக்கன் லாலிபாப் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

சிக்கன் லாலிபாப் மசாலா / Chicken Lollipop Masala
5 from 1 vote

சிக்கன் லாலிபாப் மசாலா

குழந்தைகளுக்கு இந்த சிக்கன் லாலிபாப் மசாலாமிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Main Course, Snack
Cuisine: Tamil, Tamil Nadu
Keyword: Chicken Lollipop Masala

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் சிக்கன்
  • 1 முட்டை
  • ¼ கப் சோள மாவு
  • 3 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பூண்டு பல்
  • இஞ்சி துண்டு
  • 2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்
  • 3 மேஜைக்கரண்டி ஸ்செஷ்வான் சாஸ்
  • மேஜைக்கரண்டி வினிகர்
  • ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு சர்க்கரை
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

  • முதலில் வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், 2 பல் பூண்டு, மற்றும் அரை துண்டு இஞ்சியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது சிக்கனை எடுத்து அதை நன்கு லாலிபாப்பாக தயார் செய்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் சிக்கனை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், ஒன்றரை மேஜைக்கரண்டி வினிகர், கருப்பு மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.
  • பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் சோள மாவு, மைதா மாவு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
  • 30 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து இந்த மாவில் போட்டு சிக்கன் இந்த மாவுடன் சேருமாறு அதை நன்கு கிளறி விடவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து பக்குவமாக போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை அப்படியே பொரிய விடவும்.
  • 2 நிமிடத்திற்குப் பிறகு ஒரு கரண்டியின் மூலம் சிக்கன் துண்டுகளை திருப்பி விட்டு கொண்டு சிக்கன் துண்டுகள் நன்கு பொன்னிறமாகும் வரை அதை பொரிக்கவும். (சிக்கன் துண்டுகள் பொன்னிறம் ஆவதற்கு சுமார் 6 லிருந்து 8 நிமிடம் ஆகலாம்).
  • சிக்கன் துண்டுகள் நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு மேஜைக்கரண்டி பூண்டு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சியை போட்டு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து ஸ்செஷ்வான் சாஸ்ஸை அதில் ஊற்றி அதை சுமார் அரை நிமிடம் வரை நன்கு கலந்து விடவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், வினிகர், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து அதில் சேர்த்து மசாலா நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். (ஒரு நிமிடம் முழுவதும் மசாலாவை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.)
  • மசாலா சிறிது கெட்டியானதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை போட்டு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் லாலிபாப் மசாலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் லாலிபாப் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter