நவரத்ன புலாவ்

By Praveen Kumar
நவரத்ன புலாவ் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான உணவு ஆகும். இதை செய்வதற்கு சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டாலும் இதனின் சுவை அவை அனைத்தையும் நிச்சயம் மறக்கடிக்க செய்யும்.

பிரியாணிகளில் சில வகை உண்டு. ஆனால் புலாவ்களில் பலவகை உண்டு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையே. புலாவ்களில் இருக்கும் பலவகைகளில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு ஸ்பெஷலான மற்றும் வித்தியாசமான நவரத்ன புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான நவரத்ன புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Navratan Pulao
Navratan Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

நவரத்ன புலாவ் மிகவும் ஸ்பெஷல் ஆன மற்றும் ரிச்சான ஒரு உணவு. இவை நாம் வழக்கமாக பண்டிகை காலங்களின் போது அல்லது சுப நாட்களின் போது செய்யும் உணவுகளுக்கு ஒரு அற்புதமான மாற்று உணவு. வரும் பண்டிகை நாளன்று இந்த நவரத்ன புலாவை முயற்சி செய்து பார்த்து உங்கள் விருந்தினர்களை அசத்துங்கள். இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நவரத்ன புலாவை செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பச்சை பட்டாணி, மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் எலுமிச்சை சாறு, குங்குமப்பூ பால், மிளகு, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, மற்றும் நட்சத்திர சோம்பு என்ற மசாலாக்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று கூடி வெந்து மிகவும் அட்டகாசமாக இருக்கும். இதை நிச்சயம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்.

சில குறிப்புகள்:

பன்னீரை நறுக்கிய உடன் வறுத்தால் நன்கு பிரஷ்ஷாக இருக்கும்.

உருளைக்கிழங்கை நறுக்கிய உடன் தண்ணீரில் போட்டு வைத்தால் உருளைக்கிழங்கு நிறம் மாறாமல் இருக்கும்.

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் அரிசி நன்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

புலாவ் எட்டாம் நூற்றாண்டில் Abbasid சாம்ராஜ்யத்தின் போது உதயமான ஒரு உணவாக வரலாற்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இவை முகலாயப் படை எடுப்பின் போது வெவ்வேறு பகுதிகளுக்கு பரவியதாகவும் பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள சமையல் முறைக் கேற்ப்ப மாற்றம் கண்டதாலேயே இன்றைக்கு உலகில் பலவிதமான புலாவ் வகைகள் இருக்கின்றன.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

நவரத்ன புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 25 லிருந்து 30 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 45 லிருந்து 50 நிமிடம் எடுக்கும்.

நவரத்ன புலாவை முழுமையாக சுமார் 75 நிமிடத்தில் இருந்து 80 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

நவரத்ன புலாவை ஒரு நாள் வரை பிரிட்ஜில் வைத்து உண்ணலாம். இருப்பினும் செய்யும் நாளன்றே இதை உண்டு முடித்து விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

நவரத்ன புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் பன்னீரில் புரத சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், விட்டமின் D, மற்றும் விட்டமின் B 12 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் ரத்த அழுத்தத்தை சீர் செய்ய பயன்படுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வேகவைத்த பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் பாதாம் பருப்பில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் E உள்ளது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, ரத்த அழுத்தம், மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Navratan Pulao
No ratings yet

நவரத்ன புலாவ்

நவரத்ன புலாவ் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான உணவு ஆகும். இதை செய்வதற்கு சற்று கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டாலும் இதனின் சுவை அவை அனைத்தையும் நிச்சயம் மறக்கடிக்க செய்யும்.
Prep Time20 minutes
Cook Time45 minutes
Total Time1 hour 5 minutes
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 200 gms பன்னீர்
  • 1 கை பச்சை பட்டாணி
  • 15 பீன்ஸ்
  • 4 கேரட்
  • 1/4 காலிபிளவர்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1/2 வெங்காயம்
  • 15 முந்திரிப் பருப்பு
  • 15 பாதாம் பருப்பு
  • 10 உலர் திராட்சை
  • 10 tsp குங்குமப்பூ பால்
  • 1 tsp ஷாஹி ஜீரா
  • 1 tsp மிளகு
  • 1/2 tsp எலுமிச்சை சாறு
  • 2 பிரியாணி இலை
  • 3 ஏலக்காய்
  • 2 இலவங்கப்பட்டை
  • 7 கிராம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து பீன்ஸ், கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் எலும்பிச்சம்பழத்தைப் பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு சுமார் பத்து மேஜைக்கரண்டி அளவு பாலில் குங்குமப்பூவை போட்டு அதை சுடவைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன் நிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கவனமாக நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அது அரிசியை போடவும்.
  • பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அதை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • நெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
  • அவை பொன்னிறமானதும் அதில் உலர் திராட்சையை சேர்த்து சுமார் அரை நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு pan னில் சற்று நெய்யை சேர்த்து அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுக்கவும். பன்னீர் துண்டுகளை சீரான இடைவெளியில் திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிபிளவர், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • நெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மிளகு, மற்றும் ஷாஹி ஜீராவை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை நன்கு பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).
  • அடுத்து இதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் குங்குமப்பூ பாலை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை இதன் மேலே தூவி ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து நவரத்ன புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

நவரத்ன புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை நாம் பயன்படுத்தலாமா?

உங்களுக்கு சீரக சம்பா அரிசி தான் பிடிக்கும் என்றால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நவரத்ன புலாவை ஸ்பைசியாக மாற்றுவதற்க்கு நாம் பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாமா?

உங்களுக்கு காரம் அதிகம் பிடிக்கும் என்றால் இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது மேலும் அரை மேஜைகரண்டி அளவு மிளகை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

நவரத்ன புலாவிற்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?

நவரத்ன புலாவில் நாம் கேரட் பீன்ஸ் காலிபிளவர் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்ப்பதினால் இவை எந்தவித சைடிஷ்களும் இன்றி அப்படியே உண்பதற்க்கே நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கட்டாயம் சைடிஷ் வேணும் எனில் பன்னீர் 65, மஷ்ரூம் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் மஷ்ரூம் மஞ்சூரியன்  போன்ற சைடிஷ்கள் நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சில்லி சிக்கன் அல்லது சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப் போன்ற சைடிஷ்களுடனும் இதை சுவைக்கலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment